×

திருச்சி எஸ்ஐடியில் நவ.5ம் தேதி 200 நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்

* அனைத்து வசதிகளும் செய்துகொடுக்க அமைச்சர் அறிவுறுத்தல்
* 27 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தயார்

திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நவ.5ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப கல்லூரியில் (எஸ்ஐடி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக முதல்வர் ஆணைப்படி நவ.5ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளோம்.

கடந்த அக்.15ம் தேதி ஒரு லட்சமாவது பணி ஆணையை முதல்வர் வழங்கினார். திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி குறைந்தபட்சம் 5,000க்கும் மேற்பட்ட பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இம்முகாமில், ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேர்காணலில் கலந்து கொள்ளவுள்ளன. 27 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியுடையவருக்கு பணி ஆணை கிடைக்கும். வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

திருவிழா போல நடக்கும் இந்த முகாமில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறா வண்ணம் தடுக்க சிசிடிவி மட்டுமின்றி ட்ரோன் கேமிரா உள்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் இதுவரை நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 5,67,395 பேர் பங்கேற்றுள்ளனர். சிறப்பு பஸ், குடிநீர் வசதி, உணவு வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மக்களிடம் இந்த வேலைவாய்ப்பு முகாமை கொண்டு செல்ல வேண்டும்’ என்றார். இதனையடுத்து முகாம் குறித்த விளம்பர வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், திருவெறும்பூர் ஐடிஐயை பார்வையிட்டு பணிமனைக் கூடம் மற்றும் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தொழிற்பயிற்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், இவ்வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொழில்நுட்பவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவராவ், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவி, வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் சந்திரன், துணை இயக்குநர் மாகாராணி, திருவெறும்பூர் அரசு ஐடிஐ முதல்வர் பரமேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மண்டலத் தலைவர் மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Trichy SIT , 200 companies will participate in the employment camp at Trichy SIT on 5th November
× RELATED தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!